Tuesday, January 27, 2026

உங்கள் கவனத்திற்கு

 அன்பிற்குரிய வாசகர்களுக்கு,

வணக்கம்.

புதிய  பதிவுகள் அல்லது வாசகர்களுக்கு நான் கூறவிரும்பும் செய்திகளை https://updateinfo2024.blogspot.com என்ற பதிவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

ஆகவே, அவ்வப்பொழுது, https://updateinfo2024.blogspot.com என்ற பதிவிற்குச் சென்று என்னுடைய பதிவுகளைப் பற்றிய புதிய  செய்திகளைத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,

பிரபாகரன்

Tuesday, January 20, 2026

நெடுநல்வாடை – பொருட்சுருக்கம்

 

நெடுநல்வாடைபொருட்சுருக்கம்

மழைக்கால நிகழ்வுகள்

உலகம் குளிருமாறு, வலப்புறமாக வளைந்து எழுந்து, மழை பெய்வதில் தவறாத மேகங்கள் புதுமழையைப் பெய்தன. வெள்ளம்போல் மழைநீர் வந்ததை வெறுத்த, வளைந்த கோலையுடைய இடையர்கள், எருதுகளோடு, பசு, எருமை, ஆடு போன்ற விலங்குகளின் கூட்டத்தை வேறிடத்தில் (மேடான முல்லை நிலத்தில்) மேயவிட்டனர். வேறிடத்திற்குச் சென்றதால்,  இடையர்கள் தனிமைத் துயரத்தோடு வருந்தினர். இடையர்கள் தங்கள் தலையில் காந்தளின் நீண்ட இதழ்களோடு சேர்த்துக் கட்டியிருந்த மாலைகளை அணிந்திருந்தார்கள். மழைநீர் அலைத்த-தால் அவர்கள்  அணிந்திருந்த  மாலைகள்  கசங்கிப் போயின. குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, இடையர்கள் பலரும் கூடி, கையில் கொள்ளிக்கட்டைகளைப் பிடித்துக்கொண்டு சூடேற்றிக் கொண்டார்கள். இருந்தாலும், குளிரின் கொடுமையால், அவர்களின் கன்னங்கள் புடைத்து நடுங்கின. விலங்குகள் மேய்தலை மறந்தன. குரங்குகள் குளிரால் கூனிப்போயின.  பறவைகள் குளிர் தாங்க முடியாமல் மரங்களிலிருந்து கீழே விழுந்தன. கறவை மாடுகள், தம் கன்றுகளுக்குப் பால் கொடுக்காமல் அவைகளைக் கடுமையாக உதைத்தன. மலையையே குளிர்விப்பதுபோல்  கூதிர்க்- காலத்தின் நள்ளிரவு இருந்தது. 

சிறிய முசுண்டைக்கொடியின் வெண்ணிறப் பூக்கள், பொன்னிறமான பீர்க்கம் பூக்களோடு புதர்கள் தோறும் மலர்ந்திருந்தன. வலிமையான கால்களையும் மென்மை-யான சிறகுகளையும் உடைய கொக்குகளின் கூட்டம், கருமையான வண்டல் மண் பரவிக்கிடக்கும் ஈரமான வெண்மணலில், சிவந்த வரிகளையுடைய நாரைகளுடன் நின்றுகொண்டிருந்தன.  அவை மழைநீரின் பெருக்குக் குறைந்தவுடன், எங்கெல்லாம் மீன்கள் கிடைக்குமோ அங்கு நின்று மீன்களைக் கவர்ந்தன. மழை பெய்து ஓய்ந்தபின் மேலெழுந்த, நுரை பொங்குதலைப் போன்ற வெண்ணிற மேகங்கள், அகன்ற பெரிய ஆகாயத்தில் தூவலைத் தூவுவதற்குக் கற்றுக்கொள்வதைப்போல் சிறுசிறு தூறலாகத் தூவிக்கொண்டிருந்தன.  

 

மழைக்காலத்தின் வளமை

அழகிய இடத்தையுடைய அகன்ற வயல்களில், நிறைந்த மழைநீரால் செழித்து வளர்ந்த, வளமான தாள்களையுடைய நெற்பயிர்களிலிருந்து மேலெழுந்த கதிர்கள் முற்றி வளைந்து நின்றன. நன்கு செழித்து வளர்ந்த பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்துப் பகுதியில் கூட்டமாக இருக்கும் பெரிய பாக்குக் குலைகளில் உள்ள கொத்துகளில், உள்ளிருக்கும் நீர் வற்றி, பருத்து, பசுமையான காய்கள் இனிமையாகும்படி முற்றின. செறிந்து விளங்கும் மலையுச்சியில் பலவிதமான மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில் குளிர்ச்சியான மரக்கிளைகளிலிருந்து நீர்த்துளிகள் இடைவிடாமல் சொட்டிக்கொண்டிருந்தன.

 

மாலைக்கால நிகழ்வுகள்

உயர்ந்த மாடங்களோடு கூடிய வளமான பழைய ஊரில், ஆறுகளைப் போன்ற அகன்ற நெடிய தெருக்கள் இருந்தன.  தழையாலான மாலையைத் தலையில் அணிந்து, பருத்து அழகுடன் விளங்கும் வலிமையான தோள்களும், முறுக்கிய உடலும், மிகுந்த வலிமையும் உடைய மக்கள் (யவனர்கள்), வண்டுகள் மொய்க்கும் கள்ளை மிகுதியாக உண்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு, தூறலாக விழும் குளிர்ந்த மழைத்துளிகளைப் பொருட்படுத்தாமல், பகற்பொழுது கழிந்த பிறகும், இரண்டு பக்கமும் (முன்னும் பின்னும்)தொங்கவிடப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு, விரும்பிய இடமெல்லம் சுற்றித் திரிந்தார்கள்.  வெண்மையான வளையல்களையும், இறுகிய முன்கையையும், மூங்கில் போன்ற தோள்-களையும்,  மென்மையான தோற்றத்தையும், முத்தைப் போன்ற பற்களையும், அழகுடன் விளங்கும் காதணி-களுக்கு ஏற்ப, மிகுந்த அழகும் குளிர்ச்சியும் உடைய கண்களையும் உடைய  பேதைமைத் தன்மை வாய்ந்த  பெண்கள், பூந்தட்டுகளில் வைத்திருந்த,  பசுமையான காம்புகளையுடைய பிச்சிப்பூக்களின் மலரும் பருவத்தில் உள்ள அரும்புகள் மலர்வதால், மாலைப்பொழுது வந்தது என்பதை அறிந்து, இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் நெய்யில் நனைந்த ஈரமான திரியைக் கொளுத்தி, நெல்லையும் மலரையும் தூவிக் கையால் தொழுது, வளமான கடைத்தெருக்களில் மாலைப்பொழுதைக் கொண்டாடினார்கள்.

வீட்டில் வாழும் சிவந்த கால்களையுடைய ஆண்புறாக்கள், தாம் இன்புறும் பெண்புறாக்களுடன் கூடிப் பொதுவிடங்களுக்குச் சென்று இரையைத் தேடி ஆராய்ந்து உண்ணாமல் இருந்தன.  இரவும் பகலும் மனம் கலங்கிச் செயலற்று, கொடுங்கையைத் தாங்கும் பலகையில் அந்தப் புறாக்கள் தங்கி இருந்தன.

காவலையுடைய பெரிய வீடுகளில் குற்றேவல் செய்பவர்கள் (பணிபுரிபவர்கள்), கொள்ளைப் போன்ற நிறமுடைய மணமுள்ள கல்லில் (அம்மிக் கல்லில்) வாசனைப் பொருள்களின் கலவையை அரைத்தனர். வடநாட்டவர் தந்த வெண்ணிறமான சந்தனம் அரைக்கும் கற்களில் தென்திசையிலிருந்து வந்த சந்தனக் கட்டைகள் அரைக்கப்படாமல் இருந்தன. மகளிர் தங்கள் கூந்தலில் பூமாலைகளை அணியவில்லை. அவர்கள் தங்களின்  அடர்ந்த கரிய கூந்தலில் சில மலர்களை மட்டுமே சூடியிருந்தார்கள்.  அவர்கள், குளிர்ந்த மணமுள்ள மரக்கட்டைகளை விறகாகக்கொண்டு, நெருப்பை உண்டாக்கி, கரிய,  வைரம் பாய்ந்த அகிலோடு வெண்மையான வாசனைப் பொருள்களைக் கலந்து புகைத்தனர்.

கைவேலைப்பாடுகளில் சிறந்த தொழிலாளி அழகாகச் செய்த, சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு, வளைந்த ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தது.  விண்ணைத் தொடும்படி உயர்ந்துநின்ற மேல்நிலை மாடங்களில், இளவேனில் காலத்தில் உறங்கும்படுக்கை அறைக்குத் தென்றல் காற்றைத் தரும்,  நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்- படாமல் இருந்தன. திண்மையான  நிலைவாசலில் பொருந்தியுள்ள இரட்டைக் கதவுகள் தாழிட்டுக் கிடந்தன.  கல்'லென்கிற ஓசையுடன் மழை தூவுவதால், அனைவரும் குவிந்த வாயையுடைய செம்புகளில் இருந்த தண்ணீரைக் குடிக்காமல், அகன்ற வாயையுடைய கணப்புச்சட்டியின் (தூபமூட்டியின்) சிவந்த நெருப்பின் வெப்பத்தை நுகர்ந்தனர்.

ஆடல் மகளிர் தாம் பாடுகின்ற பாடலுக்குப் பொருந்த யாழின் நரம்பைக் கூட்டுதற்கு, குளிர்ச்சியால் நிலைகுலைந்த இனிய குரலை எழுப்பும்  நரம்பை, தங்களின் பருத்து எழுந்த முலைகளின் வெப்பத்தில் தடவி, கரிய தண்டினையுடைய சிறிய யாழை, பண்ணை இசைப்பதற்கு ஏற்றவாறு முறைப்படுத்திக்கொண்டனர். கணவரைப் பிரிந்த மகளிர் வருந்துமறு, மழை மிகுதியாகப் பெய்து, குளிர்க்காலம் நிலைபெற்றிருந்தது.

 

 

 

மன்னனின் அரண்மனை

எல்லாத் திசைகளிலும், தன்னுடைய விரிந்த கதிர்களைப் பரப்பிய அகன்ற இடத்தையுடைய ஞாயிறு, மேற்கு நோக்கி உயர்ந்து எழும் நண்பகல் பொழுதில், கட்டிடக்கலை நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேராகப் பிடித்து, திசைகளைக் குறித்துக்கொண்டு, அத்திசைகளில் உள்ள தெய்வங்களைக் கருத்தில் கொண்டு, பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்த வகையில், அரண்மனையின் பாகங்களைப் பகுத்துக்-கொண்டு, ஒரு சேர அவ்விடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த நிலையையுடைய மதிலை அமைத்தனர். அந்த மதிலின் நிலையோடு பெரிய (ஆணிகளால்) இரும்பால் இணைக்கப்பட்ட, சாதிலிங்கத்தைப் (சாதிலிங்கம் – அரக்கு) பூசிய, இரண்டாக அமைந்துள்ள சிறந்த கதவுகளைப் பொருத்தினார்கள். அவை நிலையோடு இணந்து இடைவெளியில்லாமல் இருந்தன. உத்தரம் என்ற விண்மீனின் (நட்சத்திரத்தின்) பெயரைக்கொண்ட குறுக்குக் கட்டை (விட்டம்) சிறந்த வலிய மரத்தால் செய்யப்பட்டிருந்தது. அக்கதவுகளில், மலரும் பருவத்தில் உள்ள குவளை மலரின் அரும்பு போன்ற புதிய கைப்பிடிகள் பொருத்தப்பட்டிருந்தன. கைத்தொழிலில் வல்லமை பொருந்திய தச்சன் ஆணிகளை நன்றாக முடுக்கியதால் கதவுகளுக்கிடையே இடைவெளியில்லாமல் இருந்தது. நெடிய வாயிலில் சிறுவெண்கடுகுகளை அரைத்து அப்பி, நெய் தடவியிருந்தனர். அந்த வாயில், வெற்றிக்கொடியைத் தாங்கிவரும் யானைகள் அரண்மனைக்குள் நுழையும்படி உயர்ந்ததாக இருந்தது.  மலையைக் குடைந்து செய்ததைப் போல் இருந்த வாயில், திருமகள் நிலைபெற்று விளங்கும் குற்றமற்ற சிறப்புடையதாகவும் இருந்தது.

 

அத்தகைய சிறப்புடைய வாயிலையுடைய மாளிகையின்முன் உள்ள முற்றத்தில் வெண்மணல் பரப்பப்பட்டிருந்தது.  அந்த முற்றத்தில், நீண்ட மயிரை-யுடைய வெண்மையான ஆண்கவரிமாக்களும், குறுகிய கால்களையுடைய அன்னங்களும் தாவித் திரிந்து கொண்டிருந்தன. அங்கே, கொட்டிலில் நிற்பதை வெறுத்த, நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள், புல்லை மென்று தின்னும்பொழுது தனிமைத் துயரத்தில் கனைத்தன. நிலவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெண்முற்றத்தி- லுள்ள, சுறாமீனின் பிளந்தவாய் போன்ற குழாயிலிருந்து வரும் நீர் விழுகின்ற பாத்திரம் நிறைவது, கலங்கி விழுகின்ற அருவியின் ஒசையைப்போல் ஒலித்தது. அதற்கு அருகில், தோகையை விரித்து, கூவுகின்ற மெல்லிய இயல்பையுடைய மயிலின் ஓசை ஊதுகொம்பின் ஓசைபோல் இருந்தது.  இந்த ஒசைகள், அடர்ந்த மலையில் காணப்படும் ஆரவாரம்போல அந்த மாளிகையில் முழங்கின.

 

 

அந்தப்புரம்

பெருமை பொருந்திய தலைமையினையுடைய மன்னனைத் தவிர, மற்ற ஆண்கள் எவரும் அருகே வரமுடியாதபடி  காவலும் எல்லையும் உடையதாக அரண்மனையின் அந்தப்புரம் இருந்தது. பணிப்பெண்கள், யவனர் செய்த சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கும் பெண்சிலையின், கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத் தரும் அழகுடைய அகல் விளக்குகளில்  நிறைய நெய்யை ஊற்றி, பருத்த திரிகளைக் கொளுத்தி, செந்நிறமான தழலின் மேல்நோக்கி எரிகின்ற சுடர் குறையும் போதெல்லாம் நெய்வார்த்துத் திரிகளைத் தூண்டிச் சரிப்படுத்தி, அரண்மனையின் பல்வேறு  இடங்கள்தோறும் பரந்த இருள் நீங்கும்படி செய்தனர். அந்த அந்தப்புரம் மலைகளைப் போல் உயர்ந்ததாக இருந்தது. அங்கு, மலைகளைச் சேர்ந்து, வானவில் கிடப்பதுபோல் பலநிறக் கொடிகளும் அசைந்து கொண்டிருந்தன. பல இடங்களிலும் வெள்ளியைப் போன்ற சாந்து பூசப்பட்டிருந்து. நீலமணியைப் போன்ற கரிய திரண்ட வலிய தூண்களும் இருந்தன.  செம்பினால் செய்யப் -பட்டது போன்ற உயர்ந்த சுவரில், பல்வேறு வடிவமுடைய பூக்கள் ஒரு கொடியைச் சுற்றி இருப்பது போன்ற சித்திரம் வரையப்பட்டிருந்தது. இவ்வாறு, காண்பதற்கு இனிய நல்ல இல்லமாக கருவறை என்று பெயர்பெற்ற அந்தப்புரம் காட்சி அளித்தது.

 

கருவறையில் ஒரு கட்டில்

நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்த, முரசு போன்ற வலிய கால்களும், போரில் சிறந்த யானை என்று போற்றப்பட்ட, மிகுந்த அழகும், வரிகளையுமுடைய நெற்றியும் கொண்ட, போரில் இறந்த யானையின், தாமே வீழ்ந்த தந்தங்களைச் சீவிச் சீர்படுத்தி, அழகும் செம்மையும் பொருந்தி விளங்குமாறு, திறமையான தச்சன் கூரிய சிற்றுளியால் குடைந்து செய்த இரண்டு இலை வடிவங்களுக்கு இடையே தலைவியின் கட்டில் உருவாக்கப்பட்டிருந்தது.

 

சூல் முதிர்ந்து அசையும் இயல்புடைய மகளிரின் பால் கட்டிப் பக்கங்கள் பருத்த முலைகளைப் போல், பக்கங்களில் திரண்டிருக்கும் குடத்தை உடையதாக கட்டிலுக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி இருந்தது. பூண்டின் வலிமையான அடிப்பகுதி போன்று கட்டிலின் காலின் அடிப்பகுதி பொருத்தமாக விளங்குமாறு, அகன்ற அளவுகளைக் கொண்ட பெரும் புகழ்பெற்ற வட்ட வடிவமான கட்டில் அமைந்திருந்தது. உயர்ந்த நுண்ணிய நூலால் கோர்த்த முத்து வடங்களை நான்கு பக்கமும் சாளரம் போல் தொங்கவிட்டிருந்தனர். புலியின் உருவம் பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டுகளைப் போன்ற தகடுகளால் கட்டிலின் மேலிடம் மறையும்படி அமைத்திருந்தனர். குற்றமற்ற சாயம் ஏற்றப்பட்ட பல மயிர்க்கற்றைகளை விரவி உருவாக்கப்-பட்ட கட்டிலில் சிங்கம் வேட்டையாடுவது போலும், காட்டில் மலரும் பல்வேறு மலர்கள் போலும் ஓவியம் வரையப்பட்டிருந்த  போர்வையை விரித்திருந்தனர். இப்படுக்கை சிறப்புற, காதலோடு துணையைப் புணர்ந்த அன்னங்களின் வெண்மையான சிறகுகளை இட்டுச் செய்த மெத்தையை கட்டிலின் மீது பரப்பி, தலையணைகளையும் வைத்திருந்தார்கள். அதன்மேல் கஞ்சியிடப்பட்டுத் துவைத்த,  மலர்களின் மணமுள்ள தூய துணியை விரித்திருந்தார்கள்.

 

கட்டிலில் தலைவி

போருக்குச் சென்ற தன் கணவனைப் பிரிந்திருந்த தலைவி, முன்பு முத்துமாலைகள் அணிந்த பருத்த முலைகளையுடைய தன்னுடைய மார்பில், இப்பொழுது முத்துமாலைகள் அணியவில்லை.  நீண்ட கூந்தல்  பின்புறம் தாழ்ந்து வீழ்ந்து கிடக்க, அவளுடைய  நல்ல நெற்றியில், எண்ணெய் தடவாததால் வறண்ட சிலவாகிய மென்மையான மயிர் புரள, தலைவி கட்டிலில் படுத்திருந்தாள். அவள் தன் காதணிகளை நீக்கி, தன் காதுகளில் உள்ள சிறிய துளைகளில், தாளுருவி என்னும் காதணியை அணிந்திருந்தாள். அவள், முன்பு   பொன்னாலான வளையல்கள் அணிந்திருந்த தன்னுடைய முன்கைகளில், இப்பொழுது வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக் கயிற்றையும் கட்டி இருந்தாள்.  வாளைமீனின் பிளந்த வாயைப் போன்ற வளைந்த சிவந்த நிறமுடைய மோதிரத்தைத் தன்னுடைய சிவந்த கைவிரலில் அணிந்திருந்தாள்.  முன்பு, பூவேலைப்பாடுகள் அமைந்த ஆடையை உயர்ந்த வளைவுகள் உடைய தன் அல்குலில் அணிந்திருந்த தலைவி, நூலால் செய்யப்பட்ட, மாசுபடிந்த பருத்திப் புடைவையை உடுத்திக்கொண்டு, வண்ணங்களால் அலங்கரிக்கப்படாத ஓவியம் போல் காட்சி அளித்தாள்.

 

ஒப்பனை செய்யப்படாத கால்களோடு, தேமல் பரந்த, மாந்தளிர் போன்ற மேனியில், அழகிய, திரண்ட மூங்கில் போன்ற மென்மையான தோள்களோடும், தாமரை மொட்டுப் போன்ற முலைகளோடும், முலைக் கச்சுகளை இறுகக் கட்டிய, வளைந்து மெலிந்த இடுப்பும், மென்மையான சாயலுமுடைய பணிப்பெண்கள் தலைவியின் நல்ல அடிகளைத் தடவி ஆறுதல் கூறினர்.

 

நரைத்த முடி கலந்திருக்கும் மணமுள்ள மெல்லிய மயிரினையுடைய, சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் அளவுக்குமீறி அதிகமாகத் திரண்டு, சுருக்கமாகவும் விளக்கமாகவும் ஆறுதலாகப் பலவற்றையும் திரும்பத் திரும்பக் கூறினர்.   இப்பொழுதே வந்துவிடுவார் உன் இனிய துணைவர்என்று, அவள் மனத்துக்கு ஏற்ற சொற்களை அவர்கள் கூறினாலும், தலைவி அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் மனம் கலங்கினாள். 

      நுண்ணிய சாதிலிங்கத்தைப் பூசிய,  வலிமையான கட்டிலின் கால்கள், பால் சுரக்காத வறிய முலை போன்ற சிறிய குடங்களைக் கொண்டிருந்தன. அத்தகைய கால்களைக் கட்டிலின் மேற்பகுதியோடு நன்கு இணைத்திருந்தனர். புதிதாகச் செய்த, மெழுகு பூசிய கட்டிலின் மேல் விதானத்தில்,  திரைச்சீலையைக் கட்டியிருந்தனர். அதில் வலிமை வாய்ந்த கொம்புகளை-யுடைய மேடராசியை முதலாகக்கொண்டு, வானத்தில் ஊர்ந்து திரிந்து விரைந்து செல்லும் ஞாயிற்றோடு, மாறுபட்டு, மிகுந்த சிறப்புடைய திங்களோடு எப்பொழுதும் நிலைபெற்று விளங்கும், உரோகிணி என்னும் விண்மீனின் சித்திரம் வரையப்பட்டிருந்தது.  அதைப் பார்த்த தலைவி, தான் தன் கணவனுடன் அவ்வாறு பிரியாமல் வாழும் பேறு பெறவில்லையே என்று நினைத்துப்  பெருமூச்சுவிட்டாள். அவளுடைய கருமை-யான கண்ணிமைகளில் நிரம்பி வழியும் முத்துப் போன்ற கண்ணீரை,  ன் சிவந்த விரலால் கடைக்கண்ணில் கொண்டு சேர்த்து,  விரலில் மீந்த சிலவற்றைச் சுண்டி விட்டு, தனிமையில் வருந்தினாள்.  அன்பு மிகுந்த  தலைவிக்குத் துன்பம் தருகின்ற ஆற்றமுடியாத துயரம் தீரும்படி, வெற்றியைக் கொடுத்து, இப்பொழுதே இந்தப் போர் முடியவேண்டும் என்று செவிலித் தாயர் கொற்றவையை வேண்டினர்.

 

 

 

மன்னனின் நிலை

ஓளி மின்னும் நெற்றிப்பட்டத்தோடு விளங்கி, போர்த்தொழிலில் பயிற்சி பெற்ற யானைகளின் நீண்டு திரண்ட துதிக்கைகள் வெட்டப்பட்டு நிலத்தின்மேல் புரளும்படி, வீரர்கள் யானைகளைக் கொன்றனர். போரில் வாளால் விழுப்புண்கள் பட்ட வீரர்களைக் காண்பதற்காக, அரசன் பாசறையிலிருந்து வெளியே சென்றான். அப்பொழுது, அங்கே, அகல் விளக்குகளில் எரிந்து கொண்டிருந்த பருத்த திரிகள், வடக்குத் திசையிலிருந்து காற்று வந்தால் தெற்கு நோக்கிச் சாய்ந்தன.  வேப்பம்பூ மாலையை நுனியில் சூட்டிய வலிய காம்பினையுடைய வேலோடு, வீரன் ஒருவன் அரசனுக்கு முன்னே சென்று, புண்பட்ட வீரர்களை அரசனுக்கு முறையாகக் காட்டினான். பின்னர், பாசறையின் கரிய சேறுடைய தெருவில், மணிகளை முதுகில் இட்ட, பெரிய கால்களையுடைய பெண்யானைகளோடு,  சேணம் களையப்பெறாத, பாயும் ஓட்டத்தையுடைய செருக்குடைய குதிரைகள், தம்மேலே வீசும் மழைத்துளிகளை உதறிச் சென்றன. அரசன் தன் இடப்பக்கத்து நழுவி வீழ்ந்த அழகிய மேலாடையைத் தழுவிக்கொண்டான். வாளைத் தோளில் கோர்த்த வலிமையுடைய  காளைபோன்ற வீரனின் தோள்மேல்  தன் வலதுகையை வைத்துக்கொண்டு, போரில் விழுப்புண்பட்ட வீரர்களின் முகம் மலர்ச்சியுறுமாறு அரசன் அவர்களை நோக்கினான். இவ்வாறு வீரர்களைப் பார்த்துவரும் மன்னன்மேல் மழைத்துளி படாதவாறு, நூலால் கோர்த்த முத்துமாலைகள் தொங்கும் வெண்கொற்றக் குடை, ’தவ்’ என்னும் ஓசையோடு அசைந்து தாவும்  மழைத்துளிகளை மறைத்தது.  

நள் என்னும் ஓசையையுடைய நள்ளிர-விலும் உறங்காமல், சில வீரர்களோடு, புண்பட்ட வீரர்களைப் பார்த்துவரும் அரசன், பல பகை மன்னர்களோடு மாறுபட்டு, பாசறையில் தங்கி நடத்தும் இந்தப் போர் இப்பொழுதே முடிவதாக.


 

Saturday, October 30, 2021

நெடுநல்வாடை – அறிமுகம்

                                                                                       நெடுநல்வாடை – அறிமுகம்


தமிழ் மொழியின் தொன்மை

இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1]. அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், ‘என்ப’, ‘மொழிப’, ‘கூறுப’, ‘என்மனார் புலவர்என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன.

 

அகத்திணையும் புறத்திணையும்

பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள்  என்று இருவகையாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. திணை என்ற சொல் நிலம்’, ‘இடம்’, ’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்என்ற பல பொருட்களையுடைய ஒருசொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற சொல் பொருள்என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம், புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு. ஒருஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் பொழுதும், அவர்களின் திருமணத்திற்குப் பிறகும், தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளைப்பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ், கொடை, நிலையாமை முதலிய பொருட்களை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணையில் அடங்கும்.

 

சங்க இலக்கியம்

சங்க காலம் என்பது கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கின்றனர்.[2] சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள்  புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். மூன்று முதல் 140 அடிகளுடைய  பாடல்களில் சிறந்தவற்றை எட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். எட்டுத்தொகை என்ற சொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்கொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. முதல் அல்லது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று பேராசிரியர் மு. வரதராசன்[3] குறிப்பிடுகிறார். எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு அல்லது எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஈவா வில்டன் கருதுகிறார்.[4]

 

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்று அழைக்கப்படுகின்றன.   கீழ்வரும் பாடலில் எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.

எட்டுத்தொகை நுல்களில், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும் அகத்திணையைச் சார்ந்தவை. புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறத்திணையைச் சார்ந்தவை. அகமும் புறமும் கலந்தது பரிபாடல்.

 

பத்துப்பாட்டு

கீழ்வரும் பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களும் ஆற்றுப்படை[5] என்னும் வகையைச் சார்ந்தவை. இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களும் மதுரைக் காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை ஆகியவை அகத்திணையைச் சார்ந்தவை. நெடுநல்வாடை அகத்திணையைச் சார்ந்ததா அல்லது புறத்திணையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது. பத்துப்பாட்டில் உள்ள பாடல்களுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய பாடலாகும்; மதுரைக் காஞ்சி 782 அடிகளை உடைய மிகப் பெரிய பாடலாகும்.

 

நெடுநல்வாடை

வாடை என்பது வடக்கிலிருந்து வரும் குளிர்க்காற்று. நெடுநல்வாடை என்பதற்கு நெடிய நல்ல வாடைக் காற்று என்று பொருள். வாடைக் காற்று வீசும் குளிர் காலமாகிய ஐப்பசி மார்கழி மாதங்களில் ஒரு மன்னன் (தலைவன்) தன் மனைவியை (தலைவியை) விட்டுப் பிரிந்து போருக்குச் சென்றிருக்கிறான். தன் கணவனைப் பிரிந்து வருத்தத்தோடு இருக்கும் தலைவிக்கு ஒரு பொழுது ஒரு ஊழி (யுகம்) போல் நெடியதாக உள்ளது. பகைவன் இருக்கும் நாட்டுக்குச் சென்று பாசறையில் தங்கிப் போர் செய்யும் மன்னனுக்கு அந்த வாடைக் காற்று வீசும் காலம் வெற்றியைத் தரும் காலமாக இருப்பதால் அது அவனுக்கு நல்ல வாடைக் காலமாக உள்ளது. இவ்வாறு தலைவிக்கு நெடியதாகவும் தலைவனுக்கு நல்லதாகவும் இருக்கும் வாடைக் காலத்தில் தலைவன் தலைவி ஆகிய இருவரின் நிலை பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடை என்ற பாட்டில் விளக்கமாகவும் அழகாகவும் கூறப்பட்டிருக்கிறது.

பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடை 188 அடிகளுடன் கூடிய அகவற்பா வகையைச் சார்ந்த பாட்டு. நெடுநல்வாடையை இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவருடைய இயற்பெயர் கீரன் என்பதாக இருந்திருக்கலாம். சங்க காலத்தில் புலவர்களின் பெயருக்கு முன்னால் ‘ந’ என்ற எழுத்தைச் சேர்ப்பது வழக்கிலிருந்தது. உதாரணமாக, நச்செள்ளையார், நக்கண்ணையார் போன்ற பெயர்களில் ‘ந’ என்ற எழுத்து சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆகவே, உயர்வு கருதி ‘ஆர்’ என்ற சொல்லும் சேர்த்து, கீரன் என்பவர் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவரின் தந்தையார் மதுரையில் கணக்காயனாராக (ஆசிரியராக) இருந்ததால், இவர் மதுரைக் கணக்காயனார் மகனார் என்று அழைக்கப்பட்டார்.

 

இவரும் மதுரை நக்கீரர் என்பவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து.  வேறு சிலர், மதுரை நக்கீரர் வேறு இவர் வேறு என்பர்.  இவர் கடைச்சங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது.  இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர்.  இவருடைய பாடல்கள் புறநானூற்றில் மூன்றும் (56, 189, 395), அகநானூற்றில் பதினேழும் (36, 57, 78, 93, 120, 126, 141, 205, 227, 249, 253, 290, 310, 340, 346, 369, 389), நற்றிணையில் ஏழும் (31, 86, 197, 258, 340, 358, 367), குறுந்தொகையில் ஏழும் (78, 105, 143, 161, 266, 280, 368) இடம் பெற்றுள்ளன. இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மற்றும் பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடையை இயற்றியது மட்டுமல்லாமல் பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படையையும் இயற்றியவரும் இவரே என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், திருமுருகாற்றுப்படை   சஙகாலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்டதாக டாக்டர் மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், நெடுநல்வாடையை இயற்றிய நக்கீரரும் திருமருகாற்றுப்படையை இயற்றிய நக்கீரரும் ஒருவராக  இருந்திருக்க முடியாது. மேலும், இப்பாட்டின் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று டாக்டார் மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

நெடுநல்வாடையின் சிறப்பு

குளிரின் கொடுமை, அந்தக் குளிர் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள்,  அந்த ஊரில் உள்ள அரண்மனையின் வாயில், அரண்மனையின் முற்றம், அரண்மனையின் ஒரு பகுதியான அந்தப்புரம், அந்த அந்தப்புரத்தின் அழகு, அந்தப்புரத்தில் குளிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள், அங்குள்ள அழகாக அலங்கரிக்கப்பட்ட வட்டவடிவமான கட்டில், அந்தக் கட்டிலில் படுத்திருக்கும் அரசியின் அழகு, அவள் கணவன் போருக்குச் சென்றுள்ளதால் அவனைப் பிரிந்து வருந்தும்  அரசியின் மனநிலை, அவளுக்கு ஆறுதல் கூறும் பணிப்பெண்களின் செயல்கள், பாசறையில் உள்ள மன்னன் விழுப்புண்பட்ட வீரர்களை பார்ப்பது ஆகியவற்றை ஒரு நிழற்படம் எடுக்கும்பொழுது ஒரு ஒளிப்பதிவாளர் தொலைவிலிருந்து அருகே சென்று மிக நுணுக்கமாக ஒளிப்பதிவு  செய்வதுபோல் (like a cameraman slowly zooming in and taking a closeup shot), நெடுநல்வாடையின் ஆசிரியர் மிக அழகாகவும் நுணுக்கமாகவும் ஒரு சொல்லோவியம் தீட்டுகிறார். நெடுநல்வாடை இத்துணை அழகாக இருப்பதால்தான், அது ‘கோல நெடுநல்வாடை’ (அதாவது அழகான நெடுநல்வாடை) என்று அழைக்கப்டுகிறது.

 

இதுபோன்ற பாடலைப் படிப்பதால் என்ன பயன் என்று சிலர் சிந்திக்கலாம். இதுபோன்ற பாடல்களைப் பயன் கருதிப் படிக்காமல், நயன் கருதிப் படிக்க வேண்டும். இந்தப் பாடலைப் படிக்கும்பொழுது, படிப்பவர்கள் தங்கள் கற்பனையோடு கலந்து படித்தால், இந்தப்பாடலில் கூறப்பட்டிருக்கும் செய்திகள், ஒரு காணொளிபோல் அவர்களின் நெஞ்சைவிட்டு நீங்காமல்  என்றென்றும் நிலைத்து நிற்கும்.

நெடுநல்வாடை அகமா புறமா?

நெடுநல்வாடை அகத்திணையைச் சார்ந்ததா புறத்திணையைச் சார்ந்ததா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நெடுங்காலமாக நிலவி வருகிறது.  அகத்திணைப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் காதல் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூறும்பொழுது அவர்களின் பெயர்களைக் குறிப்பிடக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. அந்த மரபிற்கேற்ப, தலைவன் தலைவி ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர்களுடைய காதல் வாழ்க்கை மட்டும் பாடப்பட்டிருப்பதால்,  இது அகத்திணையைச் சார்ந்தது என்பது ஒரு சாராரின் கருத்து. போரில் புண்பட்ட வீர்களை அரசன் காணச் செல்லும்பொழுது, படைத்தலைவன் ஒருவன் அரசனோடு செல்கிறான். அவன் கையிலிருந்த வேலில் வேப்பம்பூ மாலையைக்  கட்டியிருந்தான் என்பது, “வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு” என்ற அடியிலிருந்து (நெடுநல்வாடை  - 176) பெறப்படுகிறது. வேப்பம்பூ மாலை பாண்டியர்களுக்கு உரியது. ஆகவே, இப்பாடல் பாண்டிய மன்னனைப் பற்றியது என்றும், அதனால், இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது என்றும் சிலர் கூறுகின்றனர். இப்பாடல்  தலயாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றியது என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். ஆனால், பாடலில் தலயாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை. மற்றும், பாடலில் வேப்பம்பூ மாலை வேலில் சூட்டப்பட்டிருந்ததாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, மன்னனின் தலையிலோ அல்லது மார்பிலோ அணியப்பட்டிருந்ததாகக் கூறப்படவில்லை.  புண்பட்டவர்களைப் பேய்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக வேப்பந்தழை, வேப்பம்பூ ஆகியவற்றைப் பயன் படுத்துவது வழக்கிலிருந்தாக புறநானூற்றுப் பாடல் 296 லிருந்து காணமுடிகிறது.

 

                  வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்

எல்லா மனையும் கல்லென் றவ்வே          (புறநானூறு – 286, 1-3)

 

ஆகவே, நெடுநல்வாடை புறத்திணையைச் சார்ந்தது என்பதற்கு ஏற்ற சான்றுகள் இல்லாத காரணத்தினால், அது அகத்திணையைச் சார்ந்தது என்று கருதுவதே சிறந்ததாகத் தோன்றுகிறது. மேலும், இப்பாட்டின் உரிப்பொருள் பிரிதலாக இருப்பதால் இப்பாட்டு, அகத்திணையின் உட்பிரிவாகிய பாலைத் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது[6].

 

                                             ****** ***** ***** *******

துணைநூல்கள்

பெருமழைப்புலவர் பொ. வெ. சோமசுந்தரனார், பத்துப்பாட்டு (பகுதி 1, 2) (2008)


திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த கழகம் லிட்., சென்னை.

முனைவர் இரா. ருக்மணி, திருமதி வைதேகி ஹெர்பர்ட் (ஆங்கில மொழியாக்கம்)  (2011),கொன்றை, சென்னை.



[1] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 5

[2] டாக்டர் பூவண்ணன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் - 14

[3] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் - 28

[4] Eva Wilden, குறுந்தொகை, பக்கம் - 1

[5] வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று தொல்காப்பியம் கூறுகிறது.

 [6]. பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார், பத்துப்பாட்டு நெடுநல்வாடை (பக்கம் 12)

உங்கள் கவனத்திற்கு

  அன்பிற்குரிய வாசகர்களுக்கு, வணக்கம். புதிய  பதிவுகள் அல்லது வாசகர்களுக்கு நான் கூறவிரும்பும் செய்திகளை https://updateinfo2024.blogspot...