நெடுநல்வாடை – அறிமுகம்
முனைவர்
இர. பிரபாகரன்
தமிழ்
மொழியின் தொன்மை
இன்று
வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது
மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள
நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி.
மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால்
எழுதப்பட்ட நூல்[1].
அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில்,
தொல்காப்பியர், ‘என்ப’, ‘மொழிப’, ‘கூறுப’, ‘என்மனார்
புலவர்’ என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார். இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும்
என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய்.
அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம்
இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம்
இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை
நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள்
வடிவத்தில்தான் இருந்தன.
அகத்திணையும்
புறத்திணையும்
பாடல்களை
அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள்
என்று இருவகையாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. திணை என்ற சொல் ‘நிலம்’, ‘இடம்’,
’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்’
என்ற பல பொருட்களையுடைய ஒருசொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற
சொல் ‘பொருள்’ என்பதைக் குறிக்கும்
சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம்,
புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு. ஒருஆணும் பெண்ணும் ஒருவரை
ஒருவர் காதலிக்கும் பொழுதும், அவர்களின் திருமணத்திற்குப்
பிறகும், தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும்
துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள
முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும்.
அகப்பொருளைப்பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். காதலைத் தவிர
வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ், கொடை, நிலையாமை முதலிய பொருட்களை மையமாகக்கொண்ட பாடல்கள்
புறத்திணையில் அடங்கும்.
சங்க
இலக்கியம்
சங்க
காலம் என்பது கி.மு. 500 முதல் கி.பி.
200 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கின்றனர்.[2] சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது.
சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு
பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு
ஆணையிட்டனர். அதற்கேற்ப, சங்க
காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த சிறந்த பத்துப்
பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று
அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். மூன்று முதல் 140
அடிகளுடைய பாடல்களில்
சிறந்தவற்றை எட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். எட்டுத்தொகை
என்ற சொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. பத்துப்பாட்டில்
அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்கொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம்
என்று அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்கள்
தொகுக்கப்பட்ட காலத்தைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி.
முதல் அல்லது கி.பி. இரண்டாம்
நூற்றாண்டு என்று பேராசிரியர் மு. வரதராசன்[3] குறிப்பிடுகிறார். எட்டுத்தொகை நூல்கள்
தொகுக்கப்பட்ட காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு அல்லது எட்டாம்
நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஈவா வில்டன் கருதுகிறார்.[4]
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்று
அழைக்கப்படுகின்றன. கீழ்வரும் பாடலில் எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
எட்டுத்தொகை நுல்களில், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும் அகத்திணையைச் சார்ந்தவை. புறநானூறு மற்றும்
பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறத்திணையைச் சார்ந்தவை. அகமும் புறமும் கலந்தது பரிபாடல்.
பத்துப்பாட்டு
கீழ்வரும்
பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
பத்துப்பாட்டு
நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து
நூல்களும் ஆற்றுப்படை[5]
என்னும் வகையைச் சார்ந்தவை. இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களும்
மதுரைக் காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை. முல்லைப்பாட்டு,
குறிஞ்சிப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை ஆகியவை அகத்திணையைச்
சார்ந்தவை. நெடுநல்வாடை அகத்திணையைச் சார்ந்ததா அல்லது
புறத்திணையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது. பத்துப்பாட்டில்
உள்ள பாடல்களுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய
பாடலாகும்; மதுரைக் காஞ்சி 782 அடிகளை
உடைய மிகப் பெரிய பாடலாகும்.
நெடுநல்வாடை
வாடை
என்பது வடக்கிலிருந்து வரும் குளிர்க்காற்று. நெடுநல்வாடை என்பதற்கு நெடிய நல்ல வாடைக்
காற்று என்று பொருள். வாடைக் காற்று வீசும் குளிர் காலமாகிய ஐப்பசி மார்கழி மாதங்களில்
ஒரு மன்னன் (தலைவன்) தன் மனைவியை (தலைவியை) விட்டுப் பிரிந்து போருக்குச் சென்றிருக்கிறான்.
தன் கணவனைப் பிரிந்து வருத்தத்தோடு இருக்கும் தலைவிக்கு ஒரு பொழுது ஒரு ஊழி (யுகம்)
போல் நெடியதாக உள்ளது. பகைவன் இருக்கும் நாட்டுக்குச் சென்று பாசறையில் தங்கிப் போர்
செய்யும் மன்னனுக்கு அந்த வாடைக் காற்று வீசும் காலம் வெற்றியைத் தரும் காலமாக இருப்பதால்
அது அவனுக்கு நல்ல வாடைக் காலமாக உள்ளது. இவ்வாறு தலைவிக்கு நெடியதாகவும் தலைவனுக்கு
நல்லதாகவும் இருக்கும் வாடைக் காலத்தில் தலைவன் தலைவி ஆகிய இருவரின் நிலை பத்துப்பாட்டில்
உள்ள நெடுநல்வாடை என்ற பாட்டில் விளக்கமாகவும் அழகாகவும் கூறப்பட்டிருக்கிறது.
பத்துப்பாட்டில்
உள்ள நெடுநல்வாடை 188 அடிகளுடன் கூடிய அகவற்பா வகையைச் சார்ந்த பாட்டு. நெடுநல்வாடையை
இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவருடைய இயற்பெயர் கீரன் என்பதாக
இருந்திருக்கலாம். சங்க காலத்தில் புலவர்களின் பெயருக்கு முன்னால் ‘ந’ என்ற எழுத்தைச்
சேர்ப்பது வழக்கிலிருந்தது. உதாரணமாக, நச்செள்ளையார், நக்கண்ணையார் போன்ற பெயர்களில்
‘ந’ என்ற எழுத்து சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆகவே, உயர்வு கருதி ‘ஆர்’ என்ற
சொல்லும் சேர்த்து, கீரன் என்பவர் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவரின் தந்தையார்
மதுரையில் கணக்காயனாராக (ஆசிரியராக) இருந்ததால், இவர் மதுரைக் கணக்காயனார் மகனார் என்று
அழைக்கப்பட்டார்.
இவரும் மதுரை நக்கீரர் என்பவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து. வேறு சிலர், மதுரை
நக்கீரர் வேறு இவர் வேறு என்பர். இவர்
கடைச்சங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும்
உடையவர். இவருடைய பாடல்கள் புறநானூற்றில்
மூன்றும் (56, 189, 395), அகநானூற்றில் பதினேழும்
(36, 57, 78, 93, 120, 126, 141, 205, 227, 249, 253, 290, 310, 340, 346, 369,
389), நற்றிணையில் ஏழும் (31, 86, 197, 258, 340, 358, 367),
குறுந்தொகையில் ஏழும் (78, 105, 143, 161, 266, 280, 368) இடம் பெற்றுள்ளன. இறையனார் அகப்பொருளுக்கு இவர்
எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மற்றும் பத்துப்பாட்டில் உள்ள
நெடுநல்வாடையை இயற்றியது மட்டுமல்லாமல் பத்துப்பாட்டில் உள்ள
திருமுருகாற்றுப்படையையும் இயற்றியவரும் இவரே
என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், திருமுருகாற்றுப்படை சஙகாலத்திற்குப்
பின்னர் இயற்றப்பட்டதாக டாக்டர் மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். அவ்வாறாயின்,
நெடுநல்வாடையை இயற்றிய நக்கீரரும் திருமருகாற்றுப்படையை இயற்றிய நக்கீரரும் ஒருவராக இருந்திருக்க முடியாது. மேலும், இப்பாட்டின் காலம்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று டாக்டார் மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.
நெடுநல்வாடையின்
சிறப்பு
குளிரின்
கொடுமை, அந்தக் குளிர் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள், அந்த ஊரில் உள்ள அரண்மனையின் வாயில், அரண்மனையின்
முற்றம், அரண்மனையின் ஒரு பகுதியான
அந்தப்புரம், அந்த அந்தப்புரத்தின் அழகு, அந்தப்புரத்தில் குளிர்காலத்தில் நடைபெறும்
நிகழ்வுகள், அங்குள்ள அழகாக அலங்கரிக்கப்பட்ட வட்டவடிவமான கட்டில், அந்தக் கட்டிலில்
படுத்திருக்கும் அரசியின் அழகு, அவள் கணவன் போருக்குச் சென்றுள்ளதால் அவனைப் பிரிந்து
வருந்தும் அரசியின் மனநிலை, அவளுக்கு ஆறுதல்
கூறும் பணிப்பெண்களின் செயல்கள், பாசறையில் உள்ள மன்னன் விழுப்புண்பட்ட வீரர்களை பார்ப்பது
ஆகியவற்றை ஒரு நிழற்படம் எடுக்கும்பொழுது ஒரு ஒளிப்பதிவாளர் தொலைவிலிருந்து அருகே சென்று
மிக நுணுக்கமாக ஒளிப்பதிவு செய்வதுபோல்
(like a cameraman slowly zooming in and taking a closeup shot), நெடுநல்வாடையின்
ஆசிரியர் மிக அழகாகவும் நுணுக்கமாகவும் ஒரு சொல்லோவியம் தீட்டுகிறார். நெடுநல்வாடை
இத்துணை அழகாக இருப்பதால்தான், அது ‘கோல நெடுநல்வாடை’ (அதாவது அழகான நெடுநல்வாடை) என்று
அழைக்கப்டுகிறது.
இதுபோன்ற
பாடலைப் படிப்பதால் என்ன பயன் என்று சிலர் சிந்திக்கலாம். இதுபோன்ற பாடல்களைப் பயன்
கருதிப் படிக்காமல், நயன் கருதிப் படிக்க வேண்டும். இந்தப் பாடலைப் படிக்கும்பொழுது,
படிப்பவர்கள் தங்கள் கற்பனையோடு கலந்து படித்தால், இந்தப்பாடலில் கூறப்பட்டிருக்கும்
செய்திகள், ஒரு காணொளிபோல் அவர்களின் நெஞ்சைவிட்டு நீங்காமல் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
நெடுநல்வாடை
அகமா புறமா?
நெடுநல்வாடை
அகத்திணையைச் சார்ந்ததா புறத்திணையைச் சார்ந்ததா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு
நெடுங்காலமாக நிலவி வருகிறது. அகத்திணைப் பாடல்களில்
தலைவன் தலைவி ஆகியோரின் காதல் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூறும்பொழுது அவர்களின்
பெயர்களைக் குறிப்பிடக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. அந்த மரபிற்கேற்ப, தலைவன்
தலைவி ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர்களுடைய காதல் வாழ்க்கை மட்டும் பாடப்பட்டிருப்பதால், இது அகத்திணையைச் சார்ந்தது என்பது ஒரு சாராரின்
கருத்து. போரில் புண்பட்ட வீர்களை அரசன் காணச் செல்லும்பொழுது, படைத்தலைவன் ஒருவன் அரசனோடு
செல்கிறான். அவன் கையிலிருந்த வேலில் வேப்பம்பூ மாலையைக் கட்டியிருந்தான் என்பது, “வேம்பு தலையாத்த நோன்காழ்
எஃகமொடு” என்ற அடியிலிருந்து (நெடுநல்வாடை
- 176) பெறப்படுகிறது. வேப்பம்பூ மாலை பாண்டியர்களுக்கு உரியது. ஆகவே, இப்பாடல்
பாண்டிய மன்னனைப் பற்றியது என்றும், அதனால், இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது என்றும்
சிலர் கூறுகின்றனர். இப்பாடல் தலயாலங்கானத்துச்
செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றியது என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
ஆனால், பாடலில் தலயாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய குறிப்பு
ஒன்றும் காணப்படவில்லை. மற்றும், பாடலில் வேப்பம்பூ மாலை வேலில் சூட்டப்பட்டிருந்ததாகத்தான்
குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, மன்னனின் தலையிலோ அல்லது மார்பிலோ அணியப்பட்டிருந்ததாகக்
கூறப்படவில்லை. புண்பட்டவர்களைப் பேய்களிடமிருந்து
காப்பாற்றுவதற்காக வேப்பந்தழை, வேப்பம்பூ ஆகியவற்றைப் பயன் படுத்துவது வழக்கிலிருந்தாக
புறநானூற்றுப் பாடல் 296 லிருந்து காணமுடிகிறது.
வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே (புறநானூறு – 286, 1-3)
ஆகவே,
நெடுநல்வாடை புறத்திணையைச் சார்ந்தது என்பதற்கு ஏற்ற சான்றுகள் இல்லாத காரணத்தினால்,
அது அகத்திணையைச் சார்ந்தது என்று கருதுவதே சிறந்ததாகத் தோன்றுகிறது. மேலும், இப்பாட்டின்
உரிப்பொருள் பிரிதலாக இருப்பதால் இப்பாட்டு, அகத்திணையின் உட்பிரிவாகிய பாலைத் திணையைச்
சார்ந்ததாகக் கருதப்படுகிறது[6].
******
***** ***** *******
துணைநூல்கள்
பெருமழைப்புலவர்
பொ. வெ. சோமசுந்தரனார், பத்துப்பாட்டு (பகுதி 1, 2) (2008),
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த கழகம் லிட்.,
சென்னை.
முனைவர்
இரா. ருக்மணி, திருமதி வைதேகி ஹெர்பர்ட் (ஆங்கில மொழியாக்கம்) (2011),
கொன்றை, சென்னை.
[1] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 5
[2] டாக்டர்
பூவண்ணன்,
தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் - 14
[3] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் - 28
[4] Eva Wilden, குறுந்தொகை, பக்கம் - 1
[5]
வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும்
வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி
முதலியோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று
தொல்காப்பியம் கூறுகிறது.
[6]. பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார், பத்துப்பாட்டு
நெடுநல்வாடை (பக்கம் 12)
No comments:
Post a Comment